news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இந்திய-நேபாள எல்லையில் கைதான 3 யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழர்கள் ; தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க நடவடிக்கை

26 Oct, 2026
இந்திய-நேபாள சர்வதேச எல்லைப் பகுதியான உத்திரப்பிரதேச மாநிலம் பஹ்ரைச்  (Bahraich) மாவட்டத்தில், சட்டவிரோதமாக நேபாளத்திற்குள் ஊடுருவ முயன்ற மூன்று இலங்கையர்கள் மற்றும் ஒரு தமிழகப் பெண் உட்பட நால்வரை இந்திய எல்லை பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.

கடந்த புதன்கிழமை நள்ளிரவு ரஜ்ஜான்வா சோதனைச் சாவடிக்கு அருகிலுள்ள வனப்பகுதி வழியாக இவர்கள் எல்லை கடக்க முயன்றபோதே பாதுகாப்புப் படையினரால் மறிக்கப்பட்டுள்ளனர்.

முச்சக்கர வண்டி ஒன்றில் எல்லைப் பகுதிக்கு வந்திறங்கிய இவர்கள், நேபாளத்திற்குச் செல்வதற்கான வழியைக் கேட்டுக்கொண்டிருந்த போது சந்தேகத்தின் பேரில் சோதனையிடப்பட்டுள்ளனர்.

ஆரம்பத்தில் மொழிப் பிரச்சினை காரணமாக அவர்களிடம் தொடர்புகொள்வதில் சிரமம் ஏற்பட்ட போதிலும், பின்னர் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையில் அவர்களது கடவுச்சீட்டுகள் கைப்பற்றப்பட்டன.

விசாரணையில், கைதான மூன்று இலங்கையர்களின் வீசாக்களும் சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பே காலாவதியாகிவிட்டது கண்டறியப்பட்டது.

இவர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அஜித் குமார் (39), கௌசல்யா (38), பிரபாப் (38) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களுடன் கைதான நான்காவது நபர் தமிழகத்தைச் சேர்ந்த தர்ம சுதாகர் (35) என்ற பெண் எனவும், அவர் சுதாகர் என்பவரின் மனைவி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத நிலைகொள்ளல் மற்றும் எல்லை தாண்டும் முயற்சி தொடர்பில் விரிவான விசாரணைகளுக்காக நால்வரும் மூர்திஹா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களது வருகையின் பின்னணி என்ன? நேபாளத்திற்குச் செல்ல திட்டமிட்டதற்கான காரணம் என்ன?  மற்றும் இவர்களுக்கு இடையிலான தொடர்பு குறித்தும் பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மொழிப் பிரச்சினை இருப்பதால், மொழிபெயர்ப்பாளர் ஒருவரின் உதவியுடன் வாக்குமூலங்களைப் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!